|
498. |
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே. | 01 |
499. | மத்த யானையின் ஈருரி மூடிய
அத்த னேயணி ஆலவா யாய்பணி
பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே. | 02
|
500. | மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்
திண்ண கத்திரு ஆலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே. | 03
|
501. | ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே. | 04
|
502. | வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
பைய வாதுசெ யத்திரு வுள்ளமே. | 05
|
503. | நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே. | 06
|
504. | பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்
தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே. | 07
|
505. | அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்
பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே. | 08
|
506. | மாலும் நான்முக னும்மறி யாநெறி
ஆல வாயுறை யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு வுள்ளமே. | 09
|
507. | கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே. | 10
|
508. | செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
மைந்த னேயென்று வல்லம ணாசறச்
சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே | 11
|