திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 45வது திருப்பதிகம்)

3. 045 திருவாரூர்

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

477

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

01
478..

கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த
ஒருத்த னேஉமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு ஆரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.

02
479. .

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்
இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

03
480..

பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிந்
தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

04
481. .

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.

05
482..

வார்கொள் மென்முலை யாளொரு பாகமா
ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன்
சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான்
ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே.

06
483..

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.

07
484. .

இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

08
485. .

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்
அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ.

09
486..

மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள்
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம்
ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

10
487. .

வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்
சென்னி வைத்த பிரான்திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page