திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கழிப்பாலை தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 44வது திருப்பதிகம்)

3. 044 திருக்கழிப்பாலை

பண் - கௌசிகம்

திருச்சிற்றம்பலம்

வெந்த குங்கிலி யப்புகை விம்மவே	
கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்	
அந்த மும்மள வும்மறி யாததோர்	
சந்த மாலவர் மேவிய சாந்தமே.	1.80.1
	
வானி லங்க விளங்கும் இளம்பிறை	
தான லங்கல் உகந்த தலைவனார்	
கானி லங்க வருங்கழிப் பாலையார்	
மான லம்மட நோக்குடை யாளொடே.	1.80.2
	
கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்	
பொடிகொள் மார்பினிற் பூண்டதொ ராமையர்	
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்	
அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.	1.80.3
	
பண்ண லம்பட வண்டறை கொன்றையின்	
தண்ண லங்கல் உகந்த தலைவனார்	
கண்ண லங்க வருங்கழிப் பாலையுள்	
அண்ண லெங்கட வுள்ளவன் நல்லனே.	1.80.4
	
ஏரி னாருல கத்திமை யோரொடும்	
பாரி னாருட னேபர வப்படுங்	
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்	
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.	1.80.5
	
துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்	
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி	
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை	
உள்ளு வார்வினை யாயின வோயுமே.	1.80.6
	
மண்ணி னார்மலி செல்வமும் வானமும்	
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்	
பெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமுக்	
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.	1.80.7
	
இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்	
துலங்க வூன்றிய தூமழு வாளினார்	
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை	
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.	1.80.8
	
ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்	
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்	
காட்சி யாலறி யான்கழிப் பாலையை	
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.	1.80.9
	
செய்ய நுண்துவ ராடையி னாரொடு	
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்	
கையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்	
ஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.	1.80.10
	
அந்தண் காழி அருமறை ஞானசம்	
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்	
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்	
முந்தி வானுல காடன் முறைமையே.	1.80.11

	- திருச்சிற்றம்பலம் -

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page