திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவேகம்பம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 41வது திருப்பதிகம்)

3. 041 திருவேகம்பம் - திருவிருக்குக்குறள்

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

433

கருவார் கச்சித், திருவே கம்பத்
தொருவா வென்ன, மருவா வினையே.

01
434. .

மதியார் கச்சி, நதியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.

02
435..

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியாற் போற்ற, நலியா வினையே.

03
436. .

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.

04
437..

படமார் கச்சி, இடமே கம்பத்
துடையா யென்ன, அடையா வினையே.

05
438. .

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.

06
439..

கரியின் னுரியன், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.

07
440. .

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.

08
441..

மறையோன் அரியும், அறியா வனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.

09
442..

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.

10
443..

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page