|
411 |
மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 01 |
412. | ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 02
|
413. | அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 03
|
414. | சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 04
|
415. | கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 05
|
416. | கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 06
|
417. | பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 07
|
418. | மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 08
|
419. | பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 09
|
420. | தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. | 10
|
421. | எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே. | 11
|