திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கண்டியூர்வீரட்டம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 38வது திருப்பதிகம்)

3. 038 திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

400

வினவினேன்அறி யாமையில்லுரை
செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
வையமாப்பலி தேர்ந்ததே.

01
401.

உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர்
வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
மங்கையாளுட னாகவே.

02
402.

அடியராயினீர் சொல்லுமின்னறி
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாயிவ்வைய
முழுதுமாயழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே.

03
403.

பழையதொண்டர்கள் பகருமின்பல
வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துகந்த பொலிவதே.

04
404.

விரவிலாதுமைக் கேட்கின்றேனடி
விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரவெலாந்திரை மண்டுகாவிரிக்
கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல்
நஞ்சமுண்ட பரிசதே

05
405.

இயலுமாறெனக் கியம்புமின்னிறை
வன்னுமாய்நிறை செய்கையைக்
கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி
கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக்
காகவன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில்
ஊனுகந்த அருத்தியே.

06
406.

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாங்
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு
கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரோ டால்நிழல்லறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யால்அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே

07
407.

நாவிரித்தரன் தொல்புகழ்பல
பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய
கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை
வலியைவாட்டிய மாண்பதே.

08
408.

பெருமையேசர ணாகவாழ்வுறு
மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயல்
கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலும்மற்றை
மலரவன்னுணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி
யாகிநின்றஅத் தன்மையே.

09
409.

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள்
நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண்
ஆதரோது மதுகொளா
தமரரானவர் ஏத்தஅந்தகன்
றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.

10
410.

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக்
கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம்
பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வா ருயர்ந்தார்களே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page