திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பிரமபுரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 37வது திருப்பதிகம்)

3. 037 திருப்பிரமபுரம்

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

390

கரமுனம்மல ராற்புனல்மலர்
தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம்
ஐயன்நாடொறும் மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகனருள் பேணியே.

01
391.

விண்ணிலார்மதி சூடினான்விரும்
பும்மறையவன் தன்றலை
உண்ணநன்பலி பேணினான்உல
கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர
மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர்
கின்றஎம்முடை யாதியே.

02
392.

எல்லையில்புக ழாளனும்இமை
யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது
கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்
தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர
மாபுரத்துறை மைந்தனே.

03
393.

அடையலார்புரஞ் சீறியந்தணர்
ஏத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர
மாபுரத்துறை கோயிலான்
தொடையலார்நறுங் கொன்றையான்தொழி
லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற்
கீதுகாரணங் காண்மினே.

04
394.

வாயிடைம்மறை யோதிமங்கையர்
வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்எரி கானிடைப்புரி
நாடகம்இனி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
மாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப்பொருள் தந்தையாகுமென்
றோதுவார்க்கருள் தன்மையே.

05
395.

ஊடினாலினி யாவதென்னுயர்
நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ
லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர
மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி
எந்தையென்றுநின் றேத்திடே.

06
396.

செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில
ரென்றும்ஏத்தி நினைந்திட
ஐயன்ஆண்டகை அந்தணன்அரு
மாமறைப்பொரு ளாயினான்
பெய்யும்மாமழை யானவன்பிர
மாபுரம்இடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைநினைந்
தேத்துமின்வினை வீடவே.

07
397.

கன்றொருக்கையில் ஏந்திநல்விள
வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொருள்
தேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்அடி
யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர
மாபுரத்தரன் பெற்றியே.

08
398.

உண்டுடுக்கைவிட் டார்களும்உயர்
கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்குசொற் பேசுமப்பரி
வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழல்
மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர
மாபுரத்துறை கூத்தனே.

09
399.

பித்தனைப்பிர மாபுரத்துறை
பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை
செய்துநன்பொருள் மேவிட
வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன்
வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை
போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே.

10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page