திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்காளத்தி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 36வது திருப்பதிகம்)

3. 036 திருக்காளத்தி

இப்பாடலைக் கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

381

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.

01
382.

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.

02
383.

கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.

03
384.

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கள்தாம் விண்ணுல காள்வரே.

04
385.

வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

05

இப்பதிகத்தில் 6-ம், 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின.

06-07
386.

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

08
387.

மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந் துய்ம்மினே.

09
388.

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே.

10
389.

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page