|
329 |
திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே. | 01 |
330. | கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே. | 02
|
331. | கோங்கிள வேங்கையுங் கொழுமலர்ப் புன்னையுந்
தாங்குதேன் கொன்றையுந் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயல் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே. | 03
|
332. | வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமார் ஒலிஅகில் தருபுகை கமழ்தரும்
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கள்நா யகன்றன திணையடி பணிமினே. | 04
|
333. | நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுள்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே. | 05
|
334. | சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தஎம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்ம்மினே. | 06
|
335. | சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம்நவில் புரிவினன் நறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவன் அடிபணிந் துய்ம்மினே. | 07
|
336. | சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை அடிபணிந் துய்ம்மினே. | 08
|
337. | நாகணைத் துயில்பவன் நலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழல் அணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழில் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே. | 09
|
338. | உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை ஈசனை இணையடி பணிமினே. | 10
|
339. | வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே. | 11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேனியழகர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.