திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமழபாடி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 28வது திருப்பதிகம்)

3. 028 திருமழபாடி

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

296

காலையார் வண்டினங் கிண்டிய காருறுஞ்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.

01
297.

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினந் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.

02
298.

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியுஞ்
செந்தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.

03
299.

அத்தியின் உரிதனை யழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க் கருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

04
300.

கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.

05
301.

பாலனா ராருயிர் பாங்கினால் உணவருங்
காலனார் உயிர்செகக் காலினாற் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடு மாமழ பாடியே.

06
302.

விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

07
303.

கரத்தினாற் கயிலையை எடுத்தகார் அரக்கன
சிரத்தினை யூன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.

08
304.

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

09
305.

உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.

10
306.

ஞாலத்தார் ஆதிரை நாளினான் நாடொறுஞ்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தாற் பாடுவார் குற்றமற் றார்களே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page