திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருச்சக்கரப்பள்ளி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 27வது திருப்பதிகம்)

3. 027 திருச்சக்கரப்பள்ளி

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

285

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

01
286.

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

02
287.

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

03
288.

நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

04
289.

வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே.

05
290.

பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

06
291.

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

07
292.

முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

08
293.

துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

09
294.

உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

10
295.

தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெங்
கண்ணுத லவனடி கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய இவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆலந்துறைஈசுவரர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

சக்கரப்பள்ளியினிற் சார்ந்த அல்லியங்கோதை,
சொற்கிரங்கு மாலந்துறையானே என்னுஞ்
சிவநாமப் பஃறொடையானு முணர்க.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page