திருஞானசம்பந்த சுவாமிகள்
அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முன்றாம் திருமுறை)


3. 026 திருக்கானப்பேர்

பண் - கொல்லி

திருச்சிற்றம்பலம்

274

பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.

01
275.

நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

02
276.

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங்
காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.

03
277.

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.

04
278.

ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணிய
கானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே.

05
279.

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே.

06
280.

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

07
281.

வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
டோ ளினான் நெடுமுடி தொலையவே யூன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

08
282.

சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண் டோ ங்கினான்
கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.

09
283.

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

10
284.

காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே.

11

திருச்சிற்றம்பலம்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளையீசுவரர், தேவியார் - மகமாயியம்மை.
இத்தலம் காளையார் கோவிலென்று வழங்கப்படுகின்றது.


Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page