|
263 |
மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. | 01 |
264. | வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே. | 02
|
265. | மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே. | 03
|
266. | செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே. | 04
|
267. | விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே. | 05
|
268. | பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே. | 06
|
269. | கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே. | 07
|
270. | உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே. | 08
|
271. | துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே. | 09
|
272. | செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே. | 10
|
273. | சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே. | 11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கர்க்கடகேசுவரர், தேவியார் - அருமருந்துநாயகியம்மை.