|
252 |
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. | 01 |
253. | போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. | 02
|
254. | தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. | 03
|
255. | அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே. | 04
|
256. | அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. | 05
|
257. | மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. | 06
|
258. | குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. | 07
|
259. | அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. | 08
|
260. | நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. | 09
|
261. | தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே. | 10
|
262. | கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. | 11
|