|
154 |
மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை அடிக ளல்லரே. | 01 |
155. | படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே. | 02
|
156. | பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே. | 03
|
157. | ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை இறைவ ரல்லரே. | 04
|
158. | பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை
வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே. | 05
|
159. | மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே. | 06
|
160. | நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே. | 07
|
161. | மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிக ளல்லரே. | 08
|
162. | ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே. | 09
|
163. | போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்ல லில்லையே. | 10
|
164. | நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே. | 11
|