திருஞானசம்பந்த சுவாமிகள்
அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(முன்றாம் திருமுறை)


3. 013 திருப்பூந்தராய்

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

132

மின்னன எயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரம்உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே.

01

133.

மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.

02

134.

தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.

03

135.

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.

04

136.

வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.

05

137.

துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே.

06

138.

அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.

07

139.

மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.

08

140.

தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலாப் பூந்தராய் நகர்க்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே

09

141.

முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.

10

142.

புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.

11


திருச்சிற்றம்பலம்


Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page