திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கோட்டாறு தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 12வது திருப்பதிகம்)

3. 012 திருக்கோட்டாறு

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

121

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே.

01
122.

ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே.

02
123.

இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தஅழ கனன்றே.

03
124.

ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியுந்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.

04
125.

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.

05
126.

பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகுங்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.

06
127.

துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனுந்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே.

07
128.

இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே.

08
129.

ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே.

09
130.

கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.

10
131.

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஐராபதேசுவரர்,
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page