திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புனவாயில் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 11வது திருப்பதிகம்)

3. 011 திருப்புனவாயில்

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

110

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.

01
111.

விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங்
கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.

02
112.

விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்
படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.

03
113.

சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.

04
114.

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.

05
115.

வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்
காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.

06
116.

பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்
திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்
பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.

07
117.

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட
வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.

08
118.

திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.

09
119.

போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்
வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.

10
120.

பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.

11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புனவாயிலீசுவரர்,தேவியார் - கருணையீசுவரியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page