திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஇராமேச்சுரம் தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 10வது திருப்பதிகம்)

3. 010 திருஇராமேச்சுரம்

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

100

அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.

01
101.

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.

02
102.

மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.

03
103.

உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.

04
104.

ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
பேறுடை யான்பெய ரேத்தும்மாந் தர்பிணி பேருமே.

05
105.

அணையலை சூழ்கடல் அன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுரந்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.

06
106.

சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே.

07
107.

பெருவரை யன்றெடுத் தேந்தினான் தன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே.

08
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09
108.

சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட் டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே.

10
109.

பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்தனை
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page