திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவீழிமிழலை தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 9வது திருப்பதிகம்)

3. 009 திருவீழிமிழலை

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

89

கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.

01
90.

கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.

02
91.

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.

03
92.

கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

04
93.

பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.

05
94.

வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.

06
95.

சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.

07
96.

எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.

08
97.

திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.

09
98.

துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.

10
99.

வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page