திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புகலி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 7வது திருப்பதிகம்)

3.007 திருப்புகலி

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

67

கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.

01
68.

சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்
காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே.

02
69.

கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

03
70.

அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.

04
71.

சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.

05
72.

இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.

06
73.

சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.

07
74.

கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.

08
75.

பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

09
76.

பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.

10
77.

பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page