|
Home > Scriptures & Stotras > Tamil >Third ThirumuRai
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருவாவடுதுறை தேவாரத் திருப்பதிகம்
(மூன்றாம் திருமுறை 4வது திருப்பதிகம்)
நாலடிமேல் வைப்பு
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
|
34 |
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
01 | |
35. | வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
02
|
36. | நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
03
|
37. | தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
04
|
38. | கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
05
|
39. | வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
06
|
40. | வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
07
|
41. | பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
08
|
42. | உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
09
|
43. | பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
10
|
44. | அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே. 11
| | | | | | | | | | |
திருச்சிற்றம்பலம்
Back to Complete Third thirumuRai Index
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page
|