திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 2வது திருப்பதிகம்)

3. 002 திருப்பூந்தராய்

பண் - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

12

பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
வாயினாள்பனி மாமதி போல்முகத்
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே.

01
13.

காவியங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே.

02
14.

பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர்த்
தேறலூறலின் சேறுல ராதநற்
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே.

03
15.

முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே.

04
16.

பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவிச் செழுங்கரு
நீலமல்கிய காமரு வாவிநற்
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே.

05
17.

வாணிலாமதி போல்நுத லாள்மட
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
பாணிலாவிய இன்னிசையார்மொழிப் பாவையொடுஞ்
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.

06
18.

காருலாவிய வார்குழ லாள்கயற்
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னி யன்மன்னி
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.

07
19.

காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகலத்
தீசன்மேவும் இருங்கயி லையெடுத்
தானைஅன்றடர்த் தான்இணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே.

08
20.

கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை
கொவ்வைவாய்க் கொடியேரிடை யாளுமை
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே.

09
21.

கலவமாமயி லார்இய லாள்கரும்
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே.

10
22.

தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விடந் தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page