திருப்புகலி (சீர்காழி)

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புகலி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 122வது திருப்பதிகம்)

2.122 திருப்புகலி

பண் - செவ்வழி

திருச்சிற்றம்பலம்

விடையதேறி வெறிஅக் கரவார்த்த விமலனார்	
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது	
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம்மறை யோர்கள்தாம்	
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.	2.122.1
	
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்	
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது	
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்	
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.	2.122.2
	
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூறுகந் தார்மதித்	
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது	
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி	
புண்டரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.	2.122.3
	
திரியும்மூன்று புரமும் எரித்துத்திகழ் வானவர்க்	
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது	
பெரியமாடத் துயருங் கொடியின்மிடை வால்வெயிற்	
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ்தண் புகலியே.	2.122.4
	
ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின்னருள் செய்தவர்	
நாவினான் மூக்கரிவித்த நம்பர்க் கிடமாவது	
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்	
பூவிலாரும் புனற்பொய்கையில் வைகும் புகலியே.	2.122.5
	
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்	
ஒக்கவேஎம் உரவோ னுறையும் இடமாவது	
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்	
புக்கவாகப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.	2.122.6
	
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.	2.122.7
	
தொலைவிலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்	
தலையுந்தோளுந் நெரித்த சதுரர்க் கிடமாவது	
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்	
பொலியும்அந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.	2.122.8
	
கீண்டுபுக்கார் பறந்தே யுயர்ந்தார் கேழலன்னமாய்	
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது	
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்	
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியதே.	2.122.9
	
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்	
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது	
மடுப்படுக்குஞ் சுருதிப் பொருள்வல் லவர்வானுளோர்	
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியதே.	2.122.10
	
எய்தவொண்ணா இறைவன் னுறைகின்ற புகலியைக்	
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்	
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார் சிவலோகத்தில்	
எய்திநல்ல இமையோர்க ளேத்த இருப்பார்களே.	2.122.11

	        - திருச்சிற்றம்பலம் -
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page