திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பாதிரிப்புலியூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 121வது திருப்பதிகம்)

2.121 திருப்பாதிரிப்புலியூர்

பண் - செவ்வழி

திருச்சிற்றம்பலம்

முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்	
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்	
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்	
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.	2.121.1
	
கொள்ளிநக்க பகுவாய பேய் கள்குழைந் தாடவே	
முள்ளிலவம் முதுகாட் டுறையும்முதல் வன்னிடம்	
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை	
உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.	2.121.2
	
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்	
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்	
வெருளின்மானின்பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்	
அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.	2.121.3
	
போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்	
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்	
ஆதிநாலும் மவலம் மிலாதஅடி கள்மறை	
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.	2.121.4
	
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை	
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்	
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர்தனுள்	
பாகநல்லா ளொடுந்நின்ற எம்பர மேட்டியே.	2.121.5
	
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்	
புதியமுத் தந்திகழ் பாதிரிப் புலியூரெனும்	
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்	
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.	2.121.6
	
கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்	
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்	
பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள்	
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.	2.121.7
	
வீக்கமெழும் இலங்கைக் கிறை விலங்கல்லிடை	
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்	
பூக்கம ழும்புனற் பாதிரிப் புலியூர்தனை	
நோக்கமெ லிந்தணு காவினை நுணுகுங்களே.	2.121.8
	
அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை	
பொன்னந்தா துசொரி பாதிரிப் புலியூர்தனுள்	
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்	
தன்னந்தா ளுற்றுணரா ததோர் தவநீதியே.	2.121.9
	
உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்	
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்	
எரிந்துசொன்னவ் வுரைகொள்ளாதே யெடுத்தேத்துமின்	
புரிந்துவெண்ணீற் றண்ணல் பாதிரிப் புலியூரையே.	2.121.10
	
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்	
பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள்	
சந்தமாலைத் தமிழ்பத்திவை தரித்தார் கள்மேல்	
வந்துதீயவ் வடை யாமையால் வினைமாயுமே.	2.121.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page