திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமூக்கீச்சரம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 120வது திருப்பதிகம்)

2.120 திருமூக்கீச்சரம்

பண் - செவ்வழி

திருச்சிற்றம்பலம்

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்	
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்	
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ	
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.	2.120.1
	
வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்	
கொண்டவரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா	
விண்டவர்தம் மதிலெய்த பின்வேனில் வேள்வெந்தெழக்	
கண்டவர்மூக் கீச்சரத்தெம் அடிகள்செய் கன்மமே.		2.120.2
	
மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை	
உருவிலாரவ் வெரியூட்டி யதும்முல குண்டதால்	
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான் செய்த	
பொருவின்மூக் கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.		2.120.3
	
அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே	
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்	
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்	
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.	2.120.4
	
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே	
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்	
வடமன்நீடு புகழ்ப்பூழி யன்தென்னவன் கோழிமன்	
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.	2.120.5
	
வெந்தநீறு மெய்யிற்பூசு வராடுவர் வீங்கிருள்	
வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்	
அந்தண்மாமா னதன்னே ரியன்செம்பிய னாக்கிய	
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.		2.120.6
	
அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்	
உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ	
விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்	
அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.	2.120.7
	
ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததும்	
கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்	
ஆர்க்கும்வாயான் அரக்கன்னுரத் தைந்நெரித் தவ்வடல்	
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.	2.120.8
	
நீருளாரும் மலர்மேல் உறைவான்நெடு மாலுமாய்ச்	
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத்திர ளாயினான்	
சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பியன் வில்லவன்	
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.	2.120.9
	
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்	
உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்	
ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்	
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.	2.120.10
	
மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்	
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்	
நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞானசம் பந்தன	
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.		2.120.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page