திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஇரும்பைமாகாளம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 117வது திருப்பதிகம்)

2.117 திருஇரும்பைமாகாளம்

பண் - செவ்வழி

திருச்சிற்றம்பலம்

மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்	
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்	
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்	
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.	2.117.1
	
வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின	
கோதுவித்தா நீறெழக் கொடிமா மதிலாயின	
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள்	
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.		2.117.2
	
வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்	
எந்தைபெம்மா னிடம்எழில்கொள் சோலை யிரும்பைதனுள்	
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்	
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.	2.117.3
	
நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்	
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்	
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்	
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.		2.117.4
	
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்	
கூசஆனை யுரித்த பெருமான் குறைவெண்மதி	
ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்	
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.	2.117.5
	
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை	
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை	
இறைவன்எங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்	
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.	2.117.6
	
பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்	
தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம்	
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்	
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.		2.117.7
	
நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்	
அட்டமூர்த்தி யழல்போ லுருவன் னழகாகவே	
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்	
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.	2.117.8
	
அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி	
எட்டுமற்றும் இருபத்திரண் டும்மிற வூன்றினான்	
இட்டமாக விருப்பா னவன்போ லிரும்பைதனுள்	
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே.		2.117.9
	
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி	
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடம்	
குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் மிரும்பைதனுள்	
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.	2.117.10
	
எந்தையெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்	
மந்தமாயம் பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்	
அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம்	
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.		2.117.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page