திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கேதாரம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 114வது திருப்பதிகம்)

2.114 திருக்கேதாரம்

பண் - செவ்வழி

திருச்சிற்றம்பலம்

தொண்டரஞ்சு களிறு மடக்கிச் சுரும்பார்மலர்	
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்	
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்	
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.	2.114.1
	
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே	
வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்	
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்	
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.	2.114.2
	
முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர்	
எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் இடமென்பரால்	
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்	
கெந்தம்நாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.	2.114.3
	
உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள்	
எள்கலில்லா இமையோர்கள் சேரு மிடமென்பரால்	
பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க்	
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.	2.114.4
	
ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்	
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்	
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய	
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.	2.114.5
	
நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரை தன்மேல்	
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் மிடமென்பரால்	
ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும்	
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.	2.114.6
	
மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்	
தொடர்ந்த நம்மேல்வினை தீர்க்கநின்றார்க் கிடமென்பரால்	
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகள்மேல்	
கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.	2.114.7
	
அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்	
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்	
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல் சுரபுன்னைமேல்	
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.	2.114.8
	
ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்	
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்	
வீழ்ந்துசெற்று நிழற்கிறங்கும் வேழத்தின் வெண்மருப்பினைக்	
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.	2.114.9
	
கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள் மாசுடம்பினர்	
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா இடமென்பரால்	
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக்	
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.	2.114.10
	
வாய்ந்த செந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்	
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோ ருறைகின்ற கேதாரத்தை	
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்	
வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.	2.114.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமிபெயர் - கேதாரேசுவரர், தேவியார் - கௌரியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page