திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஆடானை தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 112வது திருப்பதிகம்)

2.112 திருஆடானை

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

மாதோர் கூறுகந் தேற தேறிய	
ஆதி யானுறை ஆடானை	
போதி னாற்புனைந் தேத்து வார்தமை	
வாதி யாவினை மாயுமே.	2.112.1
	
வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்	
றாட லானுறை ஆடானை	
தோடு லாமலர் தூவிக் கைதொழ	
வீடும் நுங்கள் வினைகளே.	2.112.2
	
மங்கை கூறினன் மான்ம றியுடை	
அங்கை யானுறை ஆடானை	
தங்கை யால்தொழு தேத்த வல்லவர்	
மங்கு நோய்பிணி மாயுமே.	2.112.3
	
சுண்ண நீறணி மார்பில் தோல்புனை	
அண்ண லானுறை ஆடானை	
வண்ண மாமலர் தூவிக் கைதொழ	
எண்ணு வாரிடர் ஏகுமே.	2.112.4
	
கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய	
ஐயன் மேவிய ஆடானை	
கைய ணிம்மல ரால்வ ணங்கிட	
வெய்ய வல்வினை வீடுமே.	2.112.5
	
வானி ளம்மதி மல்கு வார்சடை	
ஆனஞ் சாடலன் ஆடானை	
தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த	
ஊன முள்ள வொழியுமே.	2.112.6
	
துலங்கு வெண்மழு வேந்திச் சூழ்சடை	
அலங்க லானுறை ஆடானை	
நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்	
வலங்கொள் வார்வினை மாயுமே.	2.112.7
	
வெந்த நீறணி மார்பில் தோல்புனை	
அந்த மில்லவன் ஆடானை	
கந்த மாமலர் தூவிக் கைதொழும்	
சிந்தை யார்வினை தேயுமே.	2.112.8
	
மறைவ லாரொடு வான வர்தொழு	
தறையுந் தண்புனல் ஆடானை	
உறையும் ஈசனை யேத்தத் தீவினை	
பறையும் நல்வினை பற்றுமே.	2.112.9
	
மாய னும்மல ரானுங் கைதொழ	
ஆய அந்தணன் ஆடானை	
தூய மாமலர் தூவிக் கைதொழ	
தீய வல்வினை தீருமே.	2.112.10
	
வீடி னார்மலி வேங்க டத்துநின்	
றாட லானுறை ஆடானை	
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்	
பாட நோய்பிணி பாறுமே.	2.112.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர், தேவியார் - அம்பாயிரவல்லியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page