திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாய்மூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 111வது திருப்பதிகம்)

2.111 திருவாய்மூர்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

1201

தளிரிள வளரென உமைபாடத்
தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

01
1202

வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

02
1203

பண்ணிற் பொலிந்த வீணையர்
பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ள முருகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

03
1204

எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

04
1205

அஞ்சன மணிவணம் எழில்நிறமா
வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென
நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

05
1206

அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

06
1207

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

07
1208

கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

08
1209

ஏனம ருப்பினொ டெழிலாமை
யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினோ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

09
1210

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே.

10
1211

திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமோ டருமறை யொலிபாடல்
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர், தேவியார் - பாலினுநன்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page