திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கோட்டூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 109வது திருப்பதிகம்)

2.109 திருக்கோட்டூர்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

நீல மார்தரு கண்டனே நெற்றியோர்	
   கண்ணனே யொற்றைவிடைச்	
சூல மார்தரு கையனே துன்றுபைம்	
   பொழில்கள்சூழ்ந் தழகாய	
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்	
   தாங்குவர் பாங்காலே.	2.109.1
	
பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு	
   மெல்விர லரவல்குல்	
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென	
   மிழற்றிய மொழியார்மென்	
கொங்கை யார்குழாங் குணலைசெய் 	
   கோட் டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்	
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு	
   அருள்பெறல் எளிதாமே.	2.109.2
	
நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்	
   அடியவர் தமக்கெல்லாம்	
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்	
   செல்வமல் கியநல்ல	
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ	
   டமர்ந்தினி திருப்பாரே.	2.109.3
	
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா	
   மாங்கனி பயில்வாய	
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்	
   அன்னஞ்சேர்ந் தழகாய	
குலவு நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை	
   நீடிய புகழாரே.	2.109.4
	
உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்	
   அன்பராம் அடியார்கள்	
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு	
   பத்திசெய் தெத்திசையுங்	
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்	
   அவனருள் பெறலாமே.	2.109.5
	
துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்	
   துன்னெருக் கார்வன்னி	
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்	
   புலியுரி யுடையாடை	
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவாரை	
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை	
   ஏதம்வந் தடையாவே.	2.109.6
	
மாட மாளிகை கோபுரங் கூடங்கள்	
   மணியரங் கணிசாலை	
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்	
   பரிசொடு பயில்வாய	
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
கேட தொன்றில ராகிநல் லுலகினிற்	
   கெழுவுவர் புகழாலே.	2.109.7
	
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை	
   யெடுத்தலும் உமையஞ்சிச்	
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு	
   நாளவற் கருள்செய்த	
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்	
   கொழுந்தினைத் தொழுவார்கள்	
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்	
   தவமுடை யவர்தாமே.	2.109.8
	
பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்	
   முத்தினைப் பவளத்தைத்	
தேடி மாலயன் காணவொண் ணாதஅத்	
   திருவினைத் தெரிவைமார்	
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற்	
   கொழுந்தேயென் றெழுவார்கள்	
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்	
   நிகழ்தரு புகழா ரே.	2.109.9
	
கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்	
   கொழுந்தினைச் செழுந்திரளைப்	
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா	
   மெய்யன்நல் லருளென்றும்	
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்	
   டாக்கர்சொற் கருதாதே	
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்	
   பெருமையைப் பெறுவாரே.	2.109.10
	
பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்	
   பாவையோ டுருவாரும்	
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்	
   கொழுந்தினைச் செழும்பவளம்	
வந்து லாவிய காழியுள் ஞானசம்	
   பந்தன்வாய்ந் துரைசெய்த	
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்	
   தாங்குவர் புகழாலே.	2.109.11

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page