திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கீழ்வேளூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 105வது திருப்பதிகம்)

2.105 திருக்கீழ்வேளூர்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

மின்னு லாவிய சடையினர் விடையினர்	
   மிளிர்தரும் அரவோடும்	
பன்னு லாவிய மறையொலி நாவினர்	
   கறையணி கண்டத்தர்	
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்	
   புகழ்மிகு கீழ்வேளூர்	
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை	
   யோடிட வீடாமே.	2.105.1
	
நீரு லாவிய சடையிடை யரவொடு	
   மதிசிர நிரைமாலை	
வாரு லாவிய வனமுலை யவளொடு	
   மணிசிலம் பவையார்க்க	
ஏரு லாவிய இறைவன துறைவிடம்	
   எழில்திகழ் கீழ்வேளூர்	
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்	
   பிணியொடு வினைபோமே.	2.105.2
	
வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு	
   வெள்ளெருக் கலர்மத்தம்	
பண்ணி லாவிய பாடலோ டாடலர்	
   பயில்வுறு கீழ்வேளூர்ப்	
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்	
   கோயிலெம் பெருமானை	
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்	
   உலகினில் உள்ளாரே.	2.105.3
	
சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்	
   தொங்கவைத் தழகாக	
நாடு லாவிய பலிகொளும் நாதனார்	
   நலமிகு கீழ்வேளூர்ப்	
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்	
   கோயிலுட் பிரியாது	
நீடு லாவிய நிமலனைப் பணிபவர்	
   நிலைமிகப் பெறுவாரே.	2.105.4
	
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை	
   வடமணி சிரமாலை	
மன்று லாவிய மாதவர் இனிதியனல்	
   மணமிகு கீழ்வேளூர்	
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்	
   நிமலனை நினைவோடும்	
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை	
   தேய்வது திணமாமே.	2.105.5
	
கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்	
   கூத்தனை மகிழ்ந்துள்கித்	
தொத்து லாவிய நூலணி மார்பினர்	
   தொழுதெழு கீழ்வேளூர்ப்	
பித்து லாவிய பத்தர்கள் பேணிய	
   பெருந்திருக் கோயில்மன்னும்	
முத்து லாவிய வித்தினை யேத்துமின்	
   முடுகிய இடர்போமே.	2.105.6
	
பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்	
   வன்னியுந் துன்னாரும்	
கறைநி லாவிய கண்டர்எண் தோளினர்	
   காதல்செய் கீழ்வேளூர்	
மறைநி லாவிய அந்தணர் மலிதரு	
   பெருந்திருக் கோயில்மன்னும்	
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்	
   நினைபவர் வினைபோமே.	2.105.7
	
மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை	
   யெடுத்தலும் அரக்கன்றன்	
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்	
   உறைதரு கீழ்வேளூர்க்	
கலைநி லாவிய நாவினர் காதல்செய்	
   பெருந்திருக் கோயிலுள்	
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்	
   நினையவல் வினைபோமே.	2.105.8
	
மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு	
   மலரவன் காண்பொண்ணாப்	
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி	
   பாகனைப் பரிவோடும்	
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்	
   மல்கிய கீழ்வேளூர்	
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்	
   நடலைகள் நணுகாவே.	2.105.9
	
சீறு லாவிய தலையினர் நிலையிலா	
   அமணர்கள் சீவரத்தார்	
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்	
   சுரும்பமர் கீழ்வேளூர்	
ஏறு லாவிய கொடியனை யேதமில்	
   பெருந்திருக் கோயில்மன்னு	
பேறு லாவிய பெருமையன் திருவடி	
   பேணுமின் தவமாமே.	2.105.10
	
குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை	
   அழகமர் கீழ்வேளூர்த்	
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்	
   கோயிலெம் பெருமானை	
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு	
   புகலிமன் சம்பந்தன்	
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி	
   பெறுவது திடமாமே.	2.105.11

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page