|
1103 |
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே. | 01 |
1104 | கோல மாகரி உரித்தவர் அரவொடும்
ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே. | 02
|
1105 | மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே. | 03
|
1106 | மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
கருவினை யடையாவே. | 04
|
1107 | பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே. | 05
|
1108 | ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை அடையாவே. | 06
|
1109 | பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
தொழுமவர் தளராரே. | 07
|
1110 | இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே. | 08
|
1111 | வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
வினையவை கூடாவே. | 09
|
1112 | பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
விட்டிடும் மிகத்தானே. | 10
|
1113 | பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனைப் பணிவாரே. | 11
|