திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.99 திருக்கோடிகா - திருவிராகம்


பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

1070

இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

01
1071

அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.

02
1072

துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.

03
1073

பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

04
1074

முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

05
1075

ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

06
1076

ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.

07
1077

மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.

08
1078

மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.

09
1079

தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.

10
1080

கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page