திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீர்காழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 97வது திருப்பதிகம்)

2.97 சீர்காழி - திருவிராகம்

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்	
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்	
உம்பர்நாதன் உத்தமன் னொளிமிகுத்த செஞ்சடை	
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.	2.97.1
	
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்	
ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர்	
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம்	
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.	2.97.2
	
சோறுகூறை யின்றியே துவண்டு தூர மாய்நுமக்	
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்	
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்	
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.	2.97.3
	
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்	
உச்சிவம்மினெனுமுரை யுணர்ந்துகேட்ப தன்முனம்	
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்	
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.	2.97.4
	
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்	
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்	
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்	
கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே.	2.97.5
	
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்	
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ	
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்	
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.	2.97.6
	
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று.	2.97.7
	
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்	
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்	
மைமிகுத்த மேனிவாள் அரக்கனைநெ ரித்தவன்	
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.	2.97.8
	
காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்	
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்	
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா	
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.	2.97.9
	
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்	
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்	
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்	
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.	2.97.10
	
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை	
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை	
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்	
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.	2.97.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page