திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாழ்கொளிபுத்தூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 94வது திருப்பதிகம்)

2.94 திருவாழ்கொளிபுத்தூர்

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

சாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்	
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்	
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்	
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.1
	
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்	
கண்ணும் ஆயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்	
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்	
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.2
	
நொடியோ ராயிரம் உடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்	
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்	
முடியும் ஆயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்	
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.3
	
பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்	
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்	
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்	
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.4
	
பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்	
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்	
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்	
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.5
	
தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்	
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்	
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை	
வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.6
	
மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்	
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த	
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர்நின் றேத்த	
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.7
	
ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து	
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்	
கேழல் வெண்பிறை யன்னகெழுமணி மிடறுநின் றிலங்க	
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.8
	
வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் தானும்	
என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி	
முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை	
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.9
	
மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்	
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல	
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்	
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.	2.94.10
	
நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்	
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூரு ளானை	
இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்	
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.	2.94.11

	        - திருச்சிற்றம்பலம் -

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page