திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருத்தெங்கூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 93வது திருப்பதிகம்)

2.93 திருத்தெங்கூர்

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்	
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்	
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்	
விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.	2.93.1
	
சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்	
கொத்தின்1 தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்	
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த	
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.2
	
அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்	
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்	
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்	
விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.3
	
பண்டு நான்செய்த2 வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்	
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்	
வண்டு மாமல ரூதி மதுவுண இதழ்மறி வெய்தி	
விண்ட வார்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.4
	
சுழித்த வார்புனற் கங்கை சூடியொர் காலனைக் காலால்	
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை	
கழித்த வெண்டலையேந்திக் காமன துடல்பொடி யாக	
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.5
	
தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்	
எல்லி3 சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்	
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற	
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.6
	
நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர்4 வினைகெட நின்றார்	
முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்	
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி	
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.7
	
எண்ணி லாவிறல் அரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்	
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்	
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்	
விண்ணு லாம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.8
	
தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்	
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்	
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்	
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.9
	
சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர்சொல் தவிர	
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்	
கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த	
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.	2.93.10
	
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்	
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்	
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்	
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.		2.93.11

பாடம்: 1.கொத்தன், 2.நாம்செய்த, 3.அல்லி, 4.நினைப்பவர்	

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page