திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 92வது திருப்பதிகம்)

2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி	
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதனார் நவின்றுறை கோயில்	
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி	
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.1
	
முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை	
இயல்வ ளாவிய துடைய இன்ன முதெந்தையெம் பெருமான்	
கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்	
வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.2
	
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்	
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்	
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்	
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.3
	
பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத	
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்	
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த	
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.4
	
ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்	
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்	
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்	
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.5
	
தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக்	
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்	
உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடியதன்மேல்	
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.6
	
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்	
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்	
அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன் றெழுந்த	
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.7
	
சாம வேதமொர் கீதம் ஓதிஅத் தசமுகன் பரவும்	
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்	
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்	
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.8
	
சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு	
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்	
ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்	
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.	2.92.9
	
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்	
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பனமெய்யென விரும்பேல்	
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்	
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத்தாரே.	2.92.10
	
பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்	
மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்	
தங்கு சீர்திகழ் ஞானச ம்பந்தன் தண்டமிழ் பத்தும்	
எங்கும் ஏத்தவல் லார்கள் எய்துவர் இமையவ ருலகே.	2.92.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page