திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருமறைக்காடு தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 91வது திருப்பதிகம்)

2.91 திருமறைக்காடு

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தம்	
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்	
திங்கள் சூடினரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்	
எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.	2.91.1
	
கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை	
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம்	
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்	
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.	2.91.2
	
நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பில்	
பண்ணி யாழென முரலும் பணிமொழி1 யுமையொரு பாகன்	
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்	
கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.	2.91.3
	
ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்	
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்	
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்	
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.	2.91.4
	
அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்	
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர அருள்பவர் பதிதான்	
மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்	
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.	2.91.5
	
பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்	
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்	
புல்லம் ஏறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்	
மல்கு வெண்திரை2 யோத மாமறைக் காடது தானே.	2.91.6
	
நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்	
பாகந்தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய	
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓட	
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.	2.91.7
	
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்	
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க	
நக்குத் தன்திரு விரலால்ஊன்றலும் நடுநடுத் தரக்கன்	
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.	2.91.8
	
விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்	
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்	
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப	
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.	2.91.9
	
பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்	
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்	
அரிய வாகவுண் டோதும் அவர்திறம் ஒழிந்துநம் மடிகள்	
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.	2.91.10
	
மையு லாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்	
கையி னால் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்	
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்க வல்லார்போய்ப்	
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.	2.91.11
	
பாடம்: 1. பனிமொழி, 2. தெண்டிரை.

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page