திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை


பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

973

எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்திக்
கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

01
974

ஈர வார்சடை தன்மேல்
இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச்
சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

02
975

*பிணிக லந்தபுன் சடைமேற்
பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத
பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

03

*பிணி - கட்டுதல்

976

துன்ன ஆடையொன் றுடுத்துத்
தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

04
977

வெருகு ரிஞ்சுவெங் காட்டி
லாடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால்
ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

05
978

உரவு நீர்சடைக் கரந்த
வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற்
பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

06
979

நீல மாமணி மிடற்று
நீறணி சிவனெனப் பேணுஞ்
சீல மாந்தர்கட் கல்லாற்
சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

07
980

செழுந்தண் மால்வரை யெடுத்த
செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான்
போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக்
குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

08
981

நுணங்கு நூலயன் மாலும்
இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

09
982

சாக்கி யப்படு வாருஞ்
சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப்
பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
அரத்துறை யடிகள்தம் அருளே.

10
983

கறையி னார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லை
பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.

11

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம்பிரிக்க.
இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page