திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தென்-திருமுல்லைவாயில் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 88வது திருப்பதிகம்)

2.88 தென்-திருமுல்லைவாயில்

பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்	
	நடமன்னு துன்னு சுடரோன்	
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த	
	உமைபங்கன் எங்கள் அரனூர்	
களிமண்டு சோலை கழனிக் கலந்த	
	கமலங்கள் தங்கு மதுவின்	
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.1
	
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்	
	அயனைப் படைத்த பரமன்	
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு	
	அரவிக்க நின்ற அரனூர்	
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி	
	யவையோத மோத வெருவித்	
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.2
	
வாராத நாடன் வருவார்தம் வில்லின்	
	உருமெல்கி நாளும் உருகில்	
ஆராத இன்பன் அகலாத அன்பன்	
	அருள்மேவி நின்ற அரனூர்	
பேராத சோதி பிரியாத மார்பின்	
	அலர்மேவு பேதை பிரியாள்	
தீராத காதல் நெதிநேர நீடு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.3
	
ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்	
	இருமூன்றொ டேழு முடனாய்	
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்	
	அறியாமை நின்ற அரனூர்	
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று	
	கொடியொன்றொ டொன்று குழுமிச்	
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.4
	
கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்	
	விடைநாளும் ஏறு குழகன்	
நம்பன்னெம் அன்பன் மறைநாவன் வானின்	
	மதியேறு சென்னி அரனூர்	
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்	
	அணிகோபு ரங்க ளழகார்	
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.5
	
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி	
	யொளியேறு கொண்ட வொருவன்	
ஆனேற தேறி யழகேறு நீறன்	
	அரனேறு பூணும் அரனூர்	
மானேறு கொல்லை மயிலேறி வந்து	
	குயிலேறு சோலை மருவி	
தேனேறு மாவின் வளமேறி யாடு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.6
	
நெஞ்சார நீடு நினைவாரை மூடு	
	வினைதேய நின்ற நிமலன்	
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்	
	அனலாடு மேனி அரனூர்	
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்	
	உளதென்று வைகி வரினுஞ்	
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.7
	
வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்	
	முடிபத்து மிற்று நெரிய	
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி	
	உமைபங்கன் எங்கள் அரனூர்	
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து	
	மிளிர்கின்ற பொன்னி வடபால்	
திரைவந்து வந்து செறிதேற லாடு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.8
	
மேலோடி நீடு விளையாடல் மேவு	
	விரிநூலன் வேத முதல்வன்	
பாலாடு மேனி கரியானு முன்னி	
  யவர்தேட நின்ற பரனூர்	
காலாடு நீல மலர்துன்றி நின்ற	
	கதிரேறு செந்நெல் வயலிற்	
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.9
	
பனைமல்கு திண்கை மதமா வுரித்த	
	பரமன்ன நம்பன் அடியே	
நினைவன்ன சிந்தை அடையாத தேரர்	
	அமண்மாய நின்ற அரனூர்	
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு	
	முகுளங்க ளெங்கு நெரியச்	
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு	
	திருமுல்லை வாயி லிதுவே.	2.88.10
	
அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த	
	அருள்செய்த எந்தை மருவார்	
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி	
	திருமுல்லை வாயில் இதன்மேல்	
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான	
	மிகுபந்தன் ஒண்ட மிழ்களின்	
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்	
	அகல்வானம் ஆள்வர் மிகவே.	2.88.11

	  - திருச்சிற்றம்பலம் -

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - முல்லைவனநாதர்; தேவியார் - கோதையம்மை.

 • Back to Thirugnanasambandar Thevaram Page
  Back to Thirumurai Main Page
  Back to Thamizh Shaivite Literature Page
  Back to Shaiva Siddhanta Home Page
  Back to Shaivam Home Page