திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(இரண்டாம் திருமுறை)

2.86 திருநாரையூர்


பண் - பியந்தைக்காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

930

உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவ
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

01
931

ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே.

02
932

ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணருந்
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
திருநாரை யூர்கை தொழவே.

03
933

தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

04
934

வசையப ராதமாய வுவரோத நீங்குந்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநூலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

05
935

உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை யூர்கை தொழவே.

06
936

தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

07
937

உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

08
938

வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

09
939

மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.

10
940

எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
துளதென்பர் செம்மை யினரே.

11

திருச்சிற்றம்பலம்
Back to Complete Second thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page