|
898 |
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சை வயமே. | 01 |
899 | விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
வளர்கின்ற கொச்சை வயமே. | 02
|
900 | படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே. | 03
|
901 | எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே. | 04
|
902 | பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சை வயமே. | 05
|
903 | புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவு கொச்சை வயமே. | 06
|
| இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 07
|
904 | மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே. | 08
|
905 | வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே. | 09
|
906 | கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே. | 10
|
907 | இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே. | 11
|