திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
வேணுபுரம் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 81வது திருப்பதிகம்)

2.81 வேணுபுரம்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்	
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து	
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்	
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.	2.81.1
	
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்	
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்	
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்	
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.	2.81.2
	
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்	
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்	
மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்	
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.	2.81.3
	
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்	
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே	
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்	
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.	2.81.4
	
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு	
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்	
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்	
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.	2.81.5
	
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்	
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்	
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்	
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.	2.81.6
	
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்	
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்	
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்	
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.	2.81.7
	
இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் இலங்கையர்கோன்	
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்	
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்	
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.	2.81.8
	
தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்	
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்	
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு	
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.	2.81.9
	
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்	
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே	
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்	
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.	2.81.10

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 		2.81.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page