திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 79வது திருப்பதிகம்)

2.79 திருவாரூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்டவுண்டு	
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே	
கவன மாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காளகண்டன்	
அவனதாரூர்தொழு துய்யலாம் மையல்கொண்டஞ்சல்நெஞ்சே.	2.79.1
	
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்	
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார்கொண்டுபோவார்	
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே	
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல்நெஞ்சே.	2.79.2
	
நிணங்குடர் தோல்நரம் பென்புசேர் ஆக்கைதான் நிலாய தன்றால்	
குணங்களார்க் கல்லது குற்றம்நீங் காதெனக் குலுங்கினாயே	
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொ டேத்தும்	
அணங்கனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல்நெஞ்சே.	2.79.3
	
நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்	
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவி னாயே	
சாதியார் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்	
ஆதியா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.4
	
பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்	
துறவியார்க் கல்லது துன்பம்நீங் காதெனத் தூங்கி னாயே	
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி	
அறவனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.5
	
செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் தேரையாய்ச் சிறு பறவை	
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினாயே	
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்	
அடிகளா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.6
	
ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சேர்ப்பி வட்டில்	
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே	
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த	
ஆறனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.7
	
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் இல்லம்	
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடுகொண்டு	
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே	
அன்பனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.8
	
தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரமென்னும்	
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே	
வெந்தநீ றாடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்	
எந்தையா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.9
	
நெடியமால் பிரமனும் நீண்டுமண் ணிடந்தின்னம் நேடிக்காணாப்	
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக	
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோள்	
அடிகளா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.	2.79.10
	
பல்லிதழ் மாதவி அல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன்	
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்தன் ஆரூர்	
எல்லியம் போதெரி யாடும்எம் மீசனை யேத்து பாடல்	
சொல்லவே வல்லவர் தீதிலர் ஓதநீர் வையகத்தே.			2.79.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page