திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 77வது திருப்பதிகம்)

2.77 திருஅறையணிநல்லூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா	
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி	
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்	
ஆடினார் அறையணி நல்லூர் அங்கையால்தொழுவார்களே.	2.77.1
	
இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ	
நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்	
அலையினார்புனல்சூடிய அண்ணலார்அறை யணிநல்லூர்	
தலையினால்தொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.	2.77.2
	
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்	
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று	
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்	
கன்பினார்அறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.	2.77.3
	
விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்	
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்	
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்	
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.	2.77.4
	
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ	
ஆயினாய் கொன்றை யாய்அன லங்கையாய்  அறை யணிநல்லூர்	
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்	
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.	2.77.5
	
விரையினார் கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய	
அரையினார் அறை யணிநல்லூர் அண்ணலார் அழகாயதோர்	
நரையினார்விடை யூர்தியார் நக்கனார் நறும்போதுசேர்	
உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.	2.77.6
	
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்	
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை	
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்	
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.	2.77.7
	
தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை	
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ	
அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்	
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.	2.77.8
	
வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்	
செய்வதேயலங் காரமாம் இவையிவை தேறி யின்புறில்	
ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்ச்	
சைவனாரவர் சார்வலால்யா துஞ்சார்விலோம் நாங்களே.	2.77.9
	
வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்	
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி	
ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்	
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.	2.77.10
	
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்	
பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்	
மொழியினால் அறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திகள் தாள்தொழக்	
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.	2.77.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page