திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஅகத்தியான்பள்ளி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 76வது திருப்பதிகம்)

2.76 திருஅகத்தியான்பள்ளி

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்	
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி	
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்	
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.	2.76.1
	
துன்னங் கொண்ட வுடையான் துதைந்த வெண்ணீற்றினான்	
மன்னுங் கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்	
அன்னந்தங்கும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை	
உன்னஞ் செய்த மனத்தார்கள் தம்வினை யோடுமே.	2.76.2
	
உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்	
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்	
அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்	
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே.	2.76.3
	
காய்ந்ததுவும் மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்	
பாய்ந்ததுவும் கழற்காலனைப் பண்ணி னான்மறை	
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்	
ஏய்ந்ததுவும் மிமவான் மகளொரு பாகமே.	2.76.4
	
போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை	
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்	
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்	
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.		2.76.5
	
தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்	
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை	
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்	
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.	2.76.6
	
ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்	
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்	
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை	
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே.	2.76.7
	
செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்	
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்	
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்	
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.	2.76.8
	
சிரமு நல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்	
அரவு மல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்	
பிரம னோடுதிரு மாலுந் தேடிய பெற்றிமை	
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.	2.76.9
	
செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி	
புந்தியி லார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி	
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்	
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.	2.76.10
	
ஞாலமல் குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்	
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்	
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய	
மாலைவல்லா ரவர்தங்கள் மேல்வினை மாயுமே.	2.76.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அகத்தீசுவரர், தேவியார் - மங்கைநாயகியம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page