திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
சீர்காழி தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 75வது திருப்பதிகம்)

2.75 சீர்காழி

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்	
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்	
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்	
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.	2.75.1
	
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்	
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்	
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்	
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.	2.75.2
	
சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்	
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்	
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்	
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் நல்லனே.	2.75.3
	
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை	
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்	
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்	
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.	2.75.4
	
தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்	
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்	
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்	
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.	2.75.5
	
சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே	
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்	
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்	
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.	2.75.6
	
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ	
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்	
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்	
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.	2.75.7
	
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி	
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்	
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே	
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.	2.75.8
	
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்	
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்	
வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை	
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.	2.75.9
	
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்	
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்	
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்	
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.	2.75.10
	
கண்ணும் மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்	
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்	
வண்ணம் மூன்றுந்தமி ழில்தெரிந்திசை பாடுவார்	
விண்ணும் மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.	2.75.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page