திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருநணா (பவானி) தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 72வது திருப்பதிகம்)

2.72 திருநணா (பவானி)

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி	
அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண்சாரல்	
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்	
செந்தேன் தெளியொளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே.	2.72.1
	
நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி	
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில்	
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச்	
சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.	2.72.2
	
நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த	
மின்தாங்கு செஞ்சடையெம் விகிதர்க்கிடம்போலும் விரைசூழ்வெற்பில்	
குன்றோங்கி வன்திரைகள் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி	
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.	2.72.3
	
கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு	
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர்	
ஐயஅரனே பெருமான் அருளென்றென் றாதரிக்கச்	
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே.	2.72.4
	
முத்தேர் நகையா ளிடமாகத்  தம்மார்பில் வெண்ணூல்பூண்டு	
தொத்தேர் மலர்சடையில் வைத்தாரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த	
அத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி	
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.	2.72.5
	
வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங்கொண்டு	
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்	
அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார்கூடிச்	
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே.	2.72.6
	
கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற்சாத்தி	
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் தானுகந்த கோயிலெங்கும்	
நானா விதத்தால் விரதிகள் நல்நாமமே யேத்தி வாழ்த்தத்	
தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருநணாவே.	2.72.7
	
மன்னீ  ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி	
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முனைசேர்சீயம்	
அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியுமுன்றிற்	
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.	2.72.8
	
மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்	
கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப்	
பொய்யா மறையானும் பூமியளந்தானும் போற்ற மன்னிச்	
செய்யார் எரியாம் உருவமுற வணங்குந் திருநணாவே.	2.72.9
	
ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி	
மூடு ருவம்உகந் தார்உரை யகற்றும் மூர்த்திகோயில்	
ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையிற்சாரச்	
சேடர் சிறந்தேத்தத் தோன்றியொளி பெருகுந் திருநணாவே.	2.72.10
	
கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்	
நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணும்	
சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்	
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே.	2.72.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் பெயர் வழங்கப்படுகின்றது. சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர், தேவியார் - வேதமங்கையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page