திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பெரும்புலியூர் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 67வது திருப்பதிகம்)

2.67 திருப்பெரும்புலியூர்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்	
விண்ணுமோர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர்	
கண்ணுமோர் பாகம் உடையார் கங்கை சடையிற் கரந்தார்	
பெண்ணுமோர் பாகம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.1
	
துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்	
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக்	
கன்னிக ளின்புனை யோடு கலைமதி மாலை கலந்த	
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.2
	
கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்	
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்	
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற	
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.3
	
ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கிஆ றங்கம்	
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்	
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி	
பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.4
	
தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்	
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த	
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த	
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.5
	
கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்	
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்	
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்	
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.6
	
மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்	
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்	
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்	
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.7
	
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்	
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி	
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்	
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.8
	
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்	
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்	
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய	
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.9
	
உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்	
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்	
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்	
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.	2.67.10
	
பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை	
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்	
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி	
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.	2.67.11

	        - திருச்சிற்றம்பலம் -
  • இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page